Wednesday, 21 April 2021

வேற்றுமை வகைகள்

 வேற்றுமை, அதன் வகை, வேற்றுமை உருபுகள் பற்றி இங்குக் காண்போம்.

  

1. அகிலன் வந்தான்

2. அகிலனைப் பார்த்தான்

3. அகிலனால் வரையப்பட்டது.

 

இந்த மூன்று தொடர்களையும் படித்துப்பாருங்கள். முதல் தொடரில் உள்ள ‘அகிலன்’ என்பது எழுவாய். இரண்டாம் தொடரில் உள்ள அகிலன்,  செயப்படுபொருள்.  மூன்றாம் தொடரில்,  அகிலன் என்னும் எழுவாயைச் செயப்படுபொருளாகவும் கருத்தாவாகவும் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.

 

இவ்வாறு, பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை - எனப்படும்.

 

அவ்வாறு,  வேறுபடுத்துவதற்கு அடையாளமாகப் பெயர்ச் சொல்லின் இறுதியில் ஐ முதலான உருபுகள் நிற்கும். இவற்றை வேற்றுமை உருபுகள் என்பர்.

 

ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்

வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை. (நன்னூல்-291)

 

(தம்மை, ஏற்றுக்கொள்வதற்கு உரிய எவ்வகைப்பட்ட பெயர்க்கும் இறுதியில் நின்று, அப்பெயர்ப் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை ஆகும்; அது எட்டு வகைப்படும்).

 

பெயரே ஐ, ஆல், கு, இன், அது, கண்

விளி என்றாகும் அவற்றின் பெயர் முறை (நன்னூல்-292)

 

2.11.1 வேற்றுமையின் வகை

 

வேற்றுமை எட்டு வகைப்படும்.  அவை முதல் வேற்றுமை,  இரண்டாம் வேற்றுமை,  மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை ஆகியனவாகும்.

 

முதல் வேற்றுமையை எழுவாய் -  Nominative  Case  என்றும் இரண்டாம் வேற்றுமையைச் செயப்படுபொருள் - Accusative Case வேற்றுமை என்றும் மூன்றாம் வேற்றுமையைக் கருவி வேற்றுமை - Instrumental Case என்றும் நான்காம் வேற்றுமையைக் கொடை வேற்றுமை - Dative Case என்றும் ஐந்தாம் வேற்றுமையை நீங்கல் வேற்றுமை - Ablative Case என்றும் ஆறாம் வேற்றுமையை உடைமை வேற்றுமை - Genitive Case என்றும் ஏழாம் வேற்றுமையை இடவேற்றுமை - Locative Case என்றும் எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை - Vocative Case என்றும் அதன் செயல்பாட்டை அடிப்படையாக வைத்துக் கூறுவர்.

 

இனி,  எட்டு வகை வேற்றுமை,  அவற்றிற்குரிய உருபுகள்,  அவை எவ்வப் பொருளில் வரும் என்பதைக் காண்போம்.

 

2.11.1.1 முதல் வேற்றுமை - எழுவாய் வேற்றுமை

 

‘குமரன் வந்தார்’. இது ஒரு தொடர். இத் தொடரில் ‘குமரன்’ என்பது எழுவாய். இந்த எழுவாய், ‘வந்தார்’ என்னும் பயனிலையை ஏற்று, இயல்பாக முடிகிறது. இந்த எழுவாய், வினைமுற்று, பெயர்ச்சொல், வினாச்சொல் ஆகியவற்றுள் ஒன்றைப் பயனிலையாகக் கொண்டு முடியும். இவ்வாறு வருவது, ‘எழுவாய் வேற்றுமை’ அல்லது ‘முதல் வேற்றுமை’ எனப்படும்.

 

1. யானை வந்தது - வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.

2. நித்திலன் என் தம்பி- பெயரைக் கொண்டு முடிந்தது.

3. செல்வி யார்? - வினாப்பெயரைக் கொண்டு முடிந்தது.

 

2.11.1.2 இரண்டாம் வேற்றுமை - செயப்படுபொருள் வேற்றுமை

 

கீழ்க்காணும் தொடரை நோக்குங்கள்!

 

அழகன் செடியை நட்டான்.

 

இத் தொடரில் ‘அழகன்’ என்பது எழுவாய். ‘செடி’ என்பதும் பெயர்ச்சொல். இது ‘ஐ’ உருபை ஏற்றுச் செயப்படுபொருளை உணர்த்துகிறது.    இவ்வாறு,    ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவதை,  இரண்டாம் வேற்றுமை என்று வழங்குவர்.  இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ என்பதையும் அறிந்துகொள்க.

 

இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை போன்ற பொருள்களில் வரும்.

 

இராசராச சோழன் பெருவுடையார் கோயிலைக் கட்டினார். - ஆக்கல்

பாண்டியர் பகைவரை அழித்தார். - அழித்தல்

வீரர்கள் எல்லையை அடைந்தனர். - அடைதல்

அரசன் சினத்தை விடுத்தான். - நீத்தல்

மங்கை தாயைப் போன்றவள். - ஒத்தல்

செல்வி செல்வத்தை உடையவள். - உடைமை


2.11.1.3 மூன்றாம் வேற்றுமை - கருவி வேற்றுமை

 

மூன்றாம் வேற்றுமையானது பெயர்ப் பொருளைக் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.

 

இவற்றுள், ஆல், ஆன் உருபுகள் கருவி, கருத்தா ஆகிய இரு பொருள்களிலும் வரும்.

 

கருவி முதற்கருவி, துணைக்கருவி என இரு வகைப்படும்.

 

1). ‘நூலால் ஆடை நெய்தான்’. (முதற் கருவி) 

(காரியமாக மாறி அதுவாகவே இருப்பது).

 

2). ‘கையால் ஆடை நெய்தான்’ (துணைக் கருவி)

(காரியம் செயல்படும்வரை துணையாவது).

 

இதுபோல், கருத்தாவும் இயற்றுதல் கருத்தா, ஏவுதல் கருத்தா என இரு வகைப்படும்.

 

1). ‘கொத்தனார் பள்ளிக்கூடம் கட்டினார்’.

- இது, இயற்றுதல் கருத்தா.

(செயலைத் தானே செய்தது).

 

2). ‘அரசு பள்ளிக்கூடம் கட்டியது’.

- இது, ஏவுதல் கருத்தா.

(தான் செய்யாமல், பிறரைச் செய்யவைப்பது).

 

அடுத்து, மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருளாகவும் வரும். ஓர் எழுவாயின் செயலுடன் பிறிதொன்றும் உடன் நிகழ்வது உடனிகழ்ச்சிப் பொருளாகும்.

 

தாயோடு அறுசுவை உணவு போகும்

தந்தையொடு மகள் வந்தாள்.

 

இவ்வாறு வரும் கருவிப் பொருளில்,  ‘கொண்டு’  என்னும் வழக்குச் சொல்லும்,  உடனிகழ்ச்சிப் பொருளில் ‘உடன்’ என்னும் வழக்குச் சொல்லும் உருபுகளாக வரும். இவற்றைச் ‘சொல் உருபுகள்’ என்பர்.

 

வாள் கொண்டு பலகை அறுத்தான்.

நம்பி நண்பனுடன் பள்ளி சென்றான்.

 

2.11.1.4 நான்காம் வேற்றுமை - கொடை வேற்றுமை

 

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’. இது, கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.

 

1. புலவர்க்குப் பரிசு கொடுத்தார் - கொடை

2. நோய்க்குப் பகை மருந்து - பகை

3. பாரிக்கு நண்பர் கபிலர் - நட்பு

4. அரசர்க்கு உரிய அருங் கலம் - தகுதி

5. தாலிக்குத் தங்கம் - அதுவாதல்

6. கூலிக்கு வேலை - பொருட்டு

7. அமுதாவுக்கு மகள் அன்பரசி - முறை

8. தமிழகத்துக்குத் தெற்கு குமரி - எல்லை


மேலும், ‘கு’வுக்குப் பதிலாக, ‘பொருட்டு’, ‘நிமித்தம்’ என்பன சொல்லுருபுகளாக வரும்.

 

பணத்தின் பொருட்டு பயணம் மேற்கொண்டான்.

தேர்வின் நிமித்தம் கண் விழித்துப் படித்தான்.

 

சில இடங்களில், ‘கு’ உடன் ‘ஆக’ என்பதும் சேர்ந்து வரும்.

 

வெற்றிக்காக விடாது உழைத்தான்.

 

2.11.1.5 ஐந்தாம் வேற்றுமை - நீங்கல் வேற்றுமை

 

ஐந்தாம் வேற்றுமை உருபுகள், ‘இல்’, ‘இன்’ ஆகியவை ஆகும். இவை, தம்மை ஏற்ற பெயர்ப் பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களாக வேறுபடுத்தும்.

 

மலையின் வீழ் அருவி. - நீங்கல்

பாலின் நிறம் கொக்கு. - ஒப்பு

இந்தியாவின் வடக்கு இமயம். - எல்லை

கொடையில் மிக்கவன் பாரி. - ஏது


மேலும், இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாக வரும்.

 

1. பறவை கூட்டிலிருந்து வெளிவந்தது. - இருந்து

2. உயிரை விட மானம் பெரிது. - விட

3. தாயைக் காட்டிலும் அன்பிற் பெரியவர் யார்? - காட்டிலும்


2.11.1.6 ஆறாம் வேற்றுமை - உடைமை வேற்றுமை

 

ஆறாம் வேற்றுமை உருபு அது என்பதாகும்.  இது உரிமைப் பொருளில் வரும் என்பதையும் அறிந்துகொள்க.

 

எனது நாடு, உனது புத்தகம்

 

‘உடைய’ என்பது ஆறாம் வேற்றுமையின், சொல்லுருபாக வரும்.

 

1. என்னுடைய பள்ளிக்கூடம்.

2. யானையினுடைய தந்தம்.

 

2.11.1.7 ஏழாம் வேற்றுமை - இட வேற்றுமை

 

ஏழாம் வேற்றுமை உருபுகள் ‘இல்’, ‘இடம்’ ஆகியனவாகும்.

 

தாத்தா வீட்டில் இருக்கிறார் - இல்

குமரனிடம் பேசிக்கொண்டிருந்தேன் - இடம்


ஐந்து, ஏழாம் வேற்றுமை - வேறுபாடு

 

ஐந்தாம் வேற்றுமை உருபாகிய ‘இல்’  என்பது ஒப்பு,  ஏது,  நீங்கல் ஆகிய பொருள்களில் வரும் என்பதையும் ஏழாம் வேற்றுமை உருபாகிய ‘இல்’ இடப் பொருளில் வரும் என்பதையும் கருத்திற் கொள்க.

 

‘மலையில் மரங்கள் செழித்தன.’ - இங்கு, ‘இல்’ இடப் பொருளில்

வந்தமையால் ஏழாம் வேற்றுமை என்பதையும்

 

‘மலையில் இருந்து விழுந்தான்’ - இங்கு, ‘இல்’ நீங்கல் பொருளில்

வந்தமையால் ஐந்தாம் வேற்றுமை என்பதையும் அறிக.

 

2.11.1.8 எட்டாம் வேற்றுமை - விளி வேற்றுமை

 

வேற்றுமையுள்,  இறுதியாகக் காண இருப்பது,  எட்டாம் வேற்றுமை.  பெயர்ச் சொல்லானது, அழைத்தல் பொருளில் வரும். படர்க்கைப் பெயரை, முன்னிலைப் பெயராக்கி அழைக்க எட்டாம் வேற்றுமை பயன்படும்.  ஆதலால் இதனை,  விளி வேற்றுமை எனவும் வழங்குவர்.  (விளித்தல் - அழைத்தல்) இவ்வாறு, விளி ஏற்கும்பொழுது பெயர்ச்சொல் சில மாற்றங்களைப் பெறும்.

 

மன்னா! ஆணையிடு! குமரா இங்கே வா.

 

‘மன்னன்’ என்னும் பெயர்ச்சொல் விளி ஏற்கும்பொழுது ஈற்றெழுத்துக் கெட்டு அயல் எழுத்து நீண்டது. (மன்னா).

 

இவ்வாறாக வேற்றுமை உருபுகள் பெயரைச் சார்ந்து பொருள் வேறுபாட்டிற்குக் காரணமாக அமைவன எனப் பார்த்தோம். மேலும், இந்த வேற்றுமைகளை எண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் எனவும் பொருள் அடிப்படையில் எழுவாய், செயப்படுபொருள், கருவி எனவும் வேற்றுமை உருபுகளைப் பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். ஒரு வேற்றுமைக்கு ஓர் உருபு என்ற தொல்காப்பிய நிலை நன்னூல் காலத்தில் வேறுபட்டு,  தற்காலத்தில் ஒரு வேற்றுமைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உருபுகள் பயன்படுத்தப்படுகின்றன.




No comments:

Post a Comment

7th Maths

  Chapter 1 Number System Intext Questions 1. Write the following integers in ascending order: -5,0,2,4, -6,10, -10 2. If the integers -15, ...