பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.
தொடர்களைத் 1. தொகைநிலைத் தொடர் - Elliptical Expressions, 2. தொகாநிலைத் தொடர் - Unlliptical Expressions என இரண்டாகப் பகுக்கலாம்.
சொற்களுக்கு இடையே வேற்றுமை, வினை, உவமை, முதலியவற்றிற்கு உரிய உருபுகள் ‘தொக்கு’ வரும். (மறைந்து வரும்) அவ்வாறு வருதலைத் ‘தொகை’ என்பர் இலக்கண நூலார்.
‘தொகை’ ஆறு வகைப்படும். அவை, 1. வேற்றுமைத் தொகை 2. வினைத் தொகை 3. பண்புத் தொகை 4. உவமைத் தொகை 5. உம்மைத் தொகை 6. அன்மொழித் தொகை என்பனவாகும். இனி, ஒவ்வொன்றையும் பற்றிச் சிறிது விளக்கமாகக் காண்போம்.
‘நூல் படித்தான்’ என்னும் தொடர், ‘நூலைப் படித்தான்’ என விரியும். இதில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும். ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு என்று முன்னரே படித்துள்ளீர்கள். ஆதலால், இத் தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயிற்று.
‘தலை வணங்கினான்’ என்பது ‘தலையால் வணங்கினான்’ என விரியுமாதலின் இது மூன்றாம் வேற்றுமைத் தொகை.
‘மங்கை மகள்’ என்பது ‘மங்கைக்கு மகள்’ என விரியும். ஆதலின், இது நான்காம் வேற்றுமைத் தொகை.
‘நாடு நீங்கினான்’ என்பது ‘நாட்டின் நீங்கினான்’ என விரியும். ஆதலின் இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை.
‘வேலன் சட்டை’ என்பது ‘வேலனது சட்டை’ என விரியும். ஆதலின், இது, ஆறாம் வேற்றுமைத் தொகை.
‘மரக்கிளி’ என்பது ‘மரத்தின் கண் கிளி’ என விரியும் ஆதலின் இது, ஏழாம் வேற்றுமைத் தொகை.
‘குடி நீர்’ என்னும் தொடரைக் கவனியுங்கள். இது, குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்க இருக்கின்ற நீர் என முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தரும். ஆனால், காலம் காட்டும் இடைநிலை மறைந்துள்ளது. இவ்வாறு, காலம் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.
அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.
‘செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு, பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு) வருவது பண்புத் தொகை.
வெண்ணிலவு, இன்சுவை, வட்டக்கல்
‘தேன்மொழி’ என்பது ‘தேன்போன்ற மொழி’ என விரியும். இடையில், ‘போலும்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
‘இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வந்துள்ளது. ஆதலால் இது, உம்மைத் தொகை எனப்படும்.
‘கபிலபரணர்’, ‘உற்றார் உறவினர்’
‘பொற்றொடி வந்தாள்’ என்பது ‘பொன்னால் ஆகிய தொடியை (வளையலை) அணிந்த பெண் வந்தாள்’ என விரியும். பொன்னால் ஆகிய என மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு வேற்றுமைத் தொகையை அடுத்து, அல்லாத மொழி (அணிந்த, பெண்) மறைந்ததால். இது, வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆயிற்று.
‘அகிலன் எழுதுகிறான்’. என்னும் இத்தொடரில், அகிலன் என்னும் எழுவாயும், ‘எழுதுகிறான்’ என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளைத் தருகின்றன. இடையில், சொல்லோ உருபோ எவையும் மறைந்து வரவில்லை.
இவ்வாறு, ஒரு தொடரில் இரு சொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ, உருபோ, மறையாது பொருளை உணர்த்துவது, தொகாநிலைத் தொடர் எனப்படும்.
தொகாநிலைத் தொடர் 1. எழுவாய்த் தொடர், 2. வினைமுற்றுத் தொடர், 3. பெயரெச்சத் தொடர், 4. வினையெச்சத் தொடர், 5. விளித் தொடர், 6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர், 7. இடைச் சொற்றொடர், 8. உரிச் சொற்றொடர், 9. அடுக்குத் தொடர் என ஒன்பது வகைப்படும். அவை பற்றிக் காண்போம்.
‘இளங்கோ வந்தார்’ - இதில், இளங்கோ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘வந்தார்’ என்னும் பயனிலை வந்துள்ளது. இவ்வாறு, வரும் தொடர் எழுவாய்த் தொடர்.
கண்ணா ! வா! - இது, விளித்தொடர்.
‘கண்டனன் கற்பினுக்கு அணியை’ - இவ்வாறு, வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. ஆதலின் இது, வினைமுற்றுத் தொடர்.
‘சிரித்த குழந்தை’ - இதில், ‘சிரித்த’ என்னும் எச்சவினை ‘குழந்தை’ என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்ததால் இது, பெயரெச்சத் தொடர்.
‘கண்டு மகிழ்ந்தான்’ - இதில் கண்டு என்னும் எச்ச வினை ‘மகிழ்ந்தான்’ என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர்.
3.1.2.6 வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
‘இலக்கணத்தை இயற்றினார்’ - இத்தொடரில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து உள்ளதால், இது, வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.
‘மற்றொன்று’ - இத்தொடரில் ‘மற்று + ஒன்று’ - ‘மற்று’ என்னும் இடைச்சொல்லைத் தொடர்ந்து ‘ஒன்று’ என்னும் சொல் வந்துள்ளதால், இஃது இடைச் சொற்றொடர்.
‘கடி நகர்’ - இத்தொடரில், ‘கடி’ என்பது உரிச்சொல். அதைத் தொடர்ந்து ‘நகர்’ என்னும் சொல் வந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர்.
‘வாழ்க! வாழ்க!’ என ஒரே சொல், பலமுறை அடுக்கி வருவது, அடுக்குத் தொடர்.
No comments:
Post a Comment